கோலியின் கேட்ச்சை தவறவிட்டது ஆஸி. அணியின் தோல்விக்கு காரணமா?

விராட் கோலியின் கேட்ச்சினை மிட்செல் மார்ஷ் தவறவிட்டது ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமில்லை என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி உலக…

விராட் கோலியின் கேட்ச்சினை மிட்செல் மார்ஷ் தவறவிட்டது ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு காரணமில்லை என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி உலக கோப்பை தொடரின் 5வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களது முதல் போட்டியை விளையாடின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸை தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மிட்ஷெல் மார்ஸ் தொடங்கினர்.

மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்ஷெல் மார்ஷ் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். பின்னர் 43வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் (15) விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. பின்னர் 49.3 ஓவரில் ஆஸி. அணி 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 199 ரன்கள் மட்டுமே ஆஸி. அணி எடுத்திருந்தது. எனவே தற்போது இந்திய அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன், மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து, இரண்டாவது ஓவரை ஜோஸ் ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

10 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆட்டத்தில் இருந்தனர். பின்னர் நிதானமாக ஆடிய இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். பின்னர் 116 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டம் இழந்தார். அப்போது 37.5 ஓவர் கணக்கில் 167 ரன்களை இந்தியா எடுத்திருந்தது.

ஆனால் விராட் கோலி 12 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். அதன்பின், விராட் – ராகுல் ஜோடி வலுவான கூட்டணி அமைத்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது அன்றைய ஆட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. இறுதியாக 41.2 ஓவரில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 201 ரன்கள் எடுத்து இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. அதிகமாக கே.எல்.ராகுல் 97 ரன்கள் எடுத்திருந்தார்.

பின்னர் போட்டி முடிந்தபிறகு பேசிய ஆஸி. அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் கூறியதாவது:

விராட் கோலியின் கேட்ச்சினை தவறவிட்டது ஆஸ்திரேலியாவின் தோல்வியில் மிகப் பெரிய பங்களித்ததாக நான் நினைக்கவில்லை. அலெக்ஸ் கேரியும் கேட்ச்சை பிடித்திருக்க முடியும் என நான் நினைக்கவில்லை. அது மிட்செல் மார்ஷுக்கு வந்த கேட்ச். அலெக்ஸ் கேரியும் கேட்ச் பிடிக்க ஓடி வந்ததால், மிட்செல் மார்ஷ் கேட்ச் பிடிப்பதை தவற விட்டிருக்கலாம்.

மிட்செல் மார்ஷ் கேட்ச்சினை தவறவிட்டு விட்டார். ஃபீல்டிங்கின்போது இதுபோன்ற விஷயங்கள் இயல்புதான். ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த போட்டிகளை நோக்கி நகரும். இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். குல்தீப் யாதவ் கடந்த ஓராண்டாக மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.