சார் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சேலத்தில் சார் பதிவாளராக பணியாற்றி லஞ்சம் வாங்கி செல்வப்பாண்டியன் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில், அவரது சொந்த ஊரான தேனியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சேலம்…

சேலத்தில் சார் பதிவாளராக பணியாற்றி லஞ்சம் வாங்கி செல்வப்பாண்டியன் கையும் களவுமாக பிடிபட்ட நிலையில், அவரது சொந்த ஊரான தேனியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் தனது தாயின் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்கான தான செட்டில்மெண்ட் செய்வதற்காக சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது இடைத்தரகர் கண்ணன் என்பவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் சார் பதிவாளர் மூலம் தான செட்டில்மெண்ட் உடனடியாக செய்து தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து பழனிவேல் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் அவர்கள் ரசாயனம் தடவிய பணத்தை பழனிவேலிடம் கொடுத்து, இடைத்தரகர் கண்ணனிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளனர். அதன்படி பழனிவேல் அந்த பணத்தை நேற்று மாலை இடைத்தரகர் கண்ணனிடம் வழங்கினார். அந்த பணத்தைப் பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கண்ணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக, சார் பதிவாளர் செல்வபாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.

சார் பதிவாளர் செல்வபாண்டியன் நேற்று சேலத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று தேனியில் உள்ள அவரது வீட்டில் மதுரை டிஎஸ்பி சத்தியசீலன் மற்றும் ஆய்வாளர் ஜெயப்ரியா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.