அதிமுக ஆட்சி காலத்தில் அரசின் கஜானா முழுவதும் காலியாகி விட்டதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்.6, 9 என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ஆர்.காந்தி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் புலித்தோல் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, திமுக சார்பில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கஜானா முழுவதும் காலியாகி உள்ளதால், மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.







