பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. படம் வெளியாகி 11 நாட்களில் ரூ.150 கோடியை எட்டி சாதனை படைக்க உள்ளது.
இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
இதுதவிர இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து படம் திரையிடப்பட்ட முதல் நாள் அன்றே படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி திரையிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பெரிய எதிர்ப்புக்கு மத்தியில் மே 5 ஆம் தேதி வெளியான “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியது. படம் வெளியான முதல் 6 நாட்களில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ₹68.86 கோடி வசூலித்திருந்தது. படம் வெளியான முதல் நாள் வெள்ளிகிழமை 8.03 கோடி வசூல் ஆன நிலையில், சனிகிழமை 11.22 கோடி, ஞாயிற்றுக்கிழமை16.40 கோடி, திங்கள்கிழமை 10.07 கோடி, செவ்வாய்க்கிழம 11.12 கோடி என தொடர்ந்து புதன்கிழமை வரை ₹ 68.86 கோடி வசூல் ஈட்டியது.இதற்கு பிறகு முதல் வார வசூல் ரூ.81.14 கோடியானது. இதன் பிறகு ஒன்பது நாட்களில் ரூ.100 கோடியை எட்டியது.
இதனை தொடர்ந்து, 11 ஆம் நாளான இன்று மட்டும் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ 10 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் மற்ற நாட்களை விட குறைவு என்றாலும், இப்படத்தின் தற்போதைய மொத்த வசூல் ரூ 146.74 கோடியாக உள்ளது. மேலும் படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ 150 கோடியை கடக்கத் தயாராக உள்ளது. 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது ஹிந்தித் திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









