கொடநாடு கொலை வழக்கில் உண்மை தன்மை வெளிவரும் விரைவில் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில் திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மகிழ்வரங்கம் நடைபெற்றது.இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், திரைப்பட நடிகர்கள் பாண்டியராஜன், ரமேஷ்கண்ணா, போண்டா மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக மற்றும் கலைஞரின் புகழ் குறித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் திருப்பூரில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். அவர் தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலை வரை ஒரு மருத்துவரும், துணை சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியரும் மட்டும் தான் இருப்பார்கள் என்றார்.
தமிழ்நாட்டில் 1021 மருத்துவர்களுக்கான காலி பணியிடம் உள்ளது. அதனை பூர்த்தி செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 14 பேர் கொரோனாவில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதிலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் கொடநாடு விவகாரம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெய்குமாரின் கோரிக்கை குறித்து கூறுகையில் விரைவில் உண்மை தன்மை வெளிவரும் அனைவரும் சிறை செல்வார்கள் என்று கூறினார்.







