வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பூஜையை அக்டோபர் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். யுவன் கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் யுவன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிது. இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தளபதி 68′ படத்தின் பூஜையை அக்டோபர் முதல் வாரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.







