தலைவி திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அப்படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனை சென்னை ஆர்.கே சாலையில் உள்ள திரையரங்கில் பார்த்த பின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவின் துணிவு, அறிவு, விவேகம் போன்ற பன்முக தன்மை கொண்ட பண்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் பெண்களும் அரசியலுக்கு வரலாம் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா எனவும் அவர் குறிப்பிட்டார்.
தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் அமைச்சர் பதவி கேட்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது, ஜெயலலிதா எம்.ஜி.ஆர்-ஐ அவமதிப்பது போல ஒரு காட்சி உள்ளது, பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டத்தில் சில குறைகள் இருப்பதாக காட்சி உள்ளது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இத்தகைய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா வரலாற்றை தயாரித்ததில் திரைப்பட குழு வெற்றி பெற்றுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.








