முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை தற்போது நிறைவடைந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில், “தமிழ்நாடு அரசு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்பந்தமாக அவர் மீது கடந்த 15.09.2021ம் தேதியன்று வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
மேற்படி வழக்கு தொடர்பாக வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் நேர்முக உதலிபாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட பெங்களூரில் இரண்டு இடங்களிலும், சென்னையில் ஆறு இடங்களிலும் ஆக மொத்தம் 35 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று (16.09.2021) சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.1.80,000/- மதிப்பிலான அன்னிய செலாவணி பணம் டாலர், 9 சொகுசு கார்கள் (ஒரு ரோல்ஸ் ராய்ல்ஸ் உட்பட), 5 கம்ப்யூட்டர் ஹார்டு “டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள். 4.987 கிலோ கிராம் (623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், ரூ.34 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்” லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











