ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ராமநாதசுவாமி கோயிலின் தோற்ற வடிவில் அமைக்க மறு சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஆன்மிக பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்
வருகை அதிகமாக இருப்பதால் நெரிசலை தவிர்க்க மறுசீரமைப்பு பணிகளை கடந்த ஆண்டு மே மாதம் 26ந்தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி கானொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த மறுசீரமைப்பு பணிகளில் ராமேஸ்வரம் புதிய ரயில் நிலையக் கட்டடம்
ராமநாதசுவாமி கோயில் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான தூண்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத் தூண்கள் போல அமைய உள்ளன. ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பில் 2 மாடி
கட்டிடம் அமைய இருக்கிறது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் சார்பில்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டதாவது:
ராமேஸ்வரம் ரயில்நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த
சூழலமைப்பு, எதிர்காலத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் விமான
நிலையத்தைப் போன்ற வசதிகளை வழங்குவதற்காக ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணிகளை தெற்கு ரயில் மேற்கொண்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகளுக்காக டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய பார்சல் அலுவலகம் ஒரு மாடி அமைப்பில் திட்டமிடப்பட்டு மேல்தளம்
அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பார்சல் போக்குவரத்திற்கு என பிரத்யேக
நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது. முந்தைய முனையக் கட்டிடம் இடிக்கும் பணி நிறைவடைந்து, புதியதாக கிழக்கு மற்றும் வடக்கு முனையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டங்களுக்கான அடித்தளம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.பழைய பன்னோக்கு கட்டிடத்தின் மேல்தளம் வரை மறு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன, என தெரிவிக்கப்பட்டுள்ளது.







