ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் இன்று கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இவர் கடந்த ஆட்சியில் மம்தா அமைச்சரவையில் பார்த்தா சாட்டர்ஜி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தார். தற்போது தொழில் மற்றம் வர்த்தகத்துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் நடத்த ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக பார்த்தா சாட்டர்ஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் ஆள்சேர்ப்பு செய்யும் செயல்முறையை மேற்பார்வையிட்ட குழு உறுப்பினர்கள் முரண்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தனர். இதையடுத்து மேற்கு வங்க உயர்நீதிமன்றம் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
இதையடுத்த கடந்த 2 நாட்களாக கொல்கத்தாவில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதியல்லாவதவர்கள் நியமித்து தொடர்பாக 2 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் அமைச்சரின் நெருங்கிய நண்பரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி ரொக்க பணத்தை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இதில் பல முக்கிய பிரமுகர்கள் பலர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







