கட்டுரைகள்

தாய்வீடு திரும்புகிறதா “ஏர் இந்தியா”?


ஆர்.கே.மணிகண்டன்

கட்டுரையாளர்

1932-ல் டாடா ஏர்லைன்ஸ் ஆக இருந்த ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனம், சுதந்திரத்திற்கு பிறகு பொதுத்துறை நிறுவனமாக கையகப்படுத்தப்பட்டது.

இன்றுபோல் அதிகளவிலான தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இல்லாத காலத்தில், அசத்தலான மகாராஜா சின்னத்துடன் உலக நாடுகளிடையே பயணிகளை சுமந்தபடி உலா வந்தது ஏர் இந்தியாவின் அலுமினியப் பறவை. ஒருகாலத்தில் லாபத்தில் இயங்கிய இந்நிறுவனம், தொழில் போட்டி, அதிகரித்த நிர்வாகச் செலவு, அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அரசு சார்ந்த சலுகைகள் போன்ற பல்வேறு காரணங்களால், நஷ்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட முடிவு செய்த நிலையில், ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு விற்பதற்கான அதிகாரிகளின் பரிந்துரைக்கு, இதற்கான மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உப்பு முதல் மென்பொருள் நிறுவனங்கள் வரை நடத்தும் டாடா குழுமம், தான் கால் பதித்த அனைத்து துறைகளிலும் பெரியளவில் போட்டியின்றி ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. ஆனால், அம்பானியின் வருகைக்குப் பிறகு, அதன் முதன்மையான நிலை நழுவத் தொடங்கியது என்றே கூறலாம். ஆனாலும், இன்றளவிலும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவே திகழ்கிறது.

வளர்ச்சி நோக்கிய பயணத்தில், நேர்மையான தொழில் யுக்திகளை மட்டுமே பயன்படுத்துவதாக கூறப்படும் டாடா குழுமம், தற்போது மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. ஆம், தாத்தா ஜே.ஆர்.டி. டாடா தொடங்கிய ஏர் இந்தியாவை, அவரது பேரன் ரத்தன் டாடா, சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொத்தாக்கியுள்ளார். நாட்டின் உரிமம் பெற்ற முதல் பைலட் ஜே.ஆர்.டி. டாடா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவால் அரசுக்கு தினமும் 20 கோடி ரூபாய் என்றளவில், இதுவரை மொத்தம் 70 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் பங்குகளை விற்க முடிவு செய்தபோது, எந்த நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க முன்வரவில்லை. இதனால் நிபந்தனைகள் மேலும் எளிமையாக்கப்பட்டன. அத்துடன் விண்ணப்பிப்பதற்கான தேதியும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் கடந்தும் போதிய விண்ணப்பங்கள் கூட வரவில்லை. இதனிடையே, ஏர் இந்தியாவை தோற்றுவித்த டாடா குழுமம் வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்தது. அதேநேரத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் முன்வந்தது. முடிவில், டாடாவுக்கே திருப்பித் தந்துவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 

“ஏர் இந்தியா” மீண்டும் உத்வேகத்துடன் ஒரு பீனிக்ஸ் பறவையாக வானில் உலா வரும், என தொழில்துறை ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் மரணிக்கும் மருத்துவர்கள்: இதுவரை 864 பேர் உயிரிழப்பு!

எச்சரித்த நரசிம்மராவ்; சாதித்த மன்மோகன் சிங்

Ezhilarasan

50% போலியாமே! சானிடைசர்களில் இதை கவனிக்கிறீங்களா?

Gayathri Venkatesan