தமிழ்நாடு அரசின் திட்ட செயலாக்கத் துறையின் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் ஆலோசனை கூட்டங்கள் அவ்வப்போது அந்த துறை அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை சார்பில் இன்று (அக். 25) காலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தமிழக அரசின் விழாக்கள், துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்விலும் பாடப்பட்டது.
அப்போது உதயநிதி ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் தமிழ்நாடு அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில்தான் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழ்த் தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு யாருக்கும் கேட்காமல் போய்விட்டது. அதனால்தான் அவர்களை மீண்டும் பாட வைத்தோமே தவிர, அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல. அதன் பிறகு தேசிய கீதமும் பாடபட்டது” என விளக்கி அந்த சர்ச்சைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.







