தமிழ்நாட்டில் பெய்து வரும் திடீர் மழையால் கடந்த இரு தினங்களில் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்தெரிவித்துள்ளார்.
சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் சாலையில் மழை நீர் தேங்கி உள்ள பகுதியை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், “திடீரென பெய்த மழை காரணமாக சென்னை சாலைகளில் தேங்கிய மழையை ஓரளவு வெளியேற்றியுள்ளோம். இப்பணி இரவுக்குள் முடிந்துவிடும்” என்று தெரிவித்தார்.
மேலும், “குளங்கள் மற்றும் நீர்வரத்து பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அடுத்த மழைக்குள் பணிகளை முடிக்கவும் மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தி உள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகள் எந்த பணிகளும் நடைபெறவில்லை. பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரம் என்பதால்தான் நேற்று சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“நேற்று மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.” என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து மழையை ஏற்படுத்திய இன்னல் குறித்து பெருநகர போக்குவரத்தின் பிற்பகல் 2 மணி நிலவரத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், மெட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதைகள் மழை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அதேபோல, கே.கேநகர் – ராஜாமன்னார்சாலை, கே.பி.தாசன் சாலை, TTK 1வது குறுக்கு சந்து, ராஜரத்தினம் மைதானம் சாலை, திருமலைபிள்ளை சாலை, பிரகாசம் சாலை மற்றும் பசூல்லா சாலை ஆகிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மெதுவாக நெரிசல் ஏற்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கியுள்ள சுரங்கபாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்ப்செட்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றும்
வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.









