“இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான நாட்டில் சிறந்த கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம்…

இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான நாட்டில் சிறந்த கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் – 12ம் தேதி) வெளியிட்டது. சிறந்த கல்வி நிறுவனம், பல்கலைக்கழகம் என 16 பிரிவுகளில் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

இதில் ஒட்டுமொத்த பிரிவில் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. பொறியியல் துறையிலும் ஐஐடி சென்னை முதலிடம் பெற்றுள்ளது. அதுபோல, 2024 ஆம் ஆண்டுக்கான மாநில பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் வேலூர் சிஎம்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 18 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த மற்றொரு பெண் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்நிலையில், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

“இந்தியாவின் கல்வி மையமாக தமிழ்நாடு தொடர்ந்து ஜொலிக்கிறது. NIRF தரவரிசையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட மிகவும் முன்னணியில் இருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் உள்ள திராவிட மாடலுக்கு இது பெருமையான தருணம். நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால், நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.