2009ம் ஆண்டுக்கு பிறகு தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் இன்று வழங்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த விருதுகள் வழங்கப்பட்டதால் திரைத்துறையினர் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இதில் 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை உள்ள திரைப்படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த நடிகர்களாக 2009 – கரண் (மலையன்), 2010 – விக்ரம் (ராவணன்), 2011 – விமல் (வாகை சூடவா), 2012 – ஜீவா (நீ தானே என் பொன் வசந்தம்), 2013 – ஆர்யா (ராஜா ராணி), 2014 – சித்தார்த் (காவிய தலைவன்) ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.
சிறந்த இயக்குநர்களாக 2009 – வசந்தபாலன் (அங்காடி தேர்வு), 2010 – பிரபு சாலமன் (மைனா), 2011 -ஏ.எல்.விஜய் (தெய்வ திருமகள்), 2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9), 2013 -ராம் (தங்கமீன்கள்), 2014 -ராகவன் (மஞ்சப்பை) ஆகியோர் விருது பெற்றுள்ளனர். இதேபோல் சிறந்த இசையமைப்பாளர்கள், சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகை உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழ் திரைப்பட விருதுகள் பெற்ற திரை நட்சத்திரங்கள் பேட்டி
இயக்குனர் சமுத்திரக்கனி கூறுகையில், ஈசன், நிமிர்ந்து நில், திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகர் வருது எனக்கு கிடைத்துள்ளது. இந்த மாதிரி விருதுகள் தான் நம் வேகமாக ஓடுவதற்கு உதவுகிறது. இந்த விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நடிகர் நாசர், நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்த இந்த விருதை தற்பொழுது கொடுக்கும் தமிழக அரசுக்கு நன்றி. இந்த விருதுகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்தேன். சினிமாவை தியேட்டருக்கு சென்று அதற்கான முறையில் பாருங்கள் என்றார்.
இயக்குனர் பாண்டியராஜன், பசங்க படத்திற்கு ஏழு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. மெரினா படத்தில் சிறப்பு பரிசாக சிவகார்த்திகேயனுக்கு விருது கிடைக்கிறது. இந்த விருதுகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என்று கூறினார்.







