டி20 உலகக் கோப்பை – இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற தமிழர்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரும் இடம்பெற்றிருந்தார்.  பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த 29-ம்…

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞரும் இடம்பெற்றிருந்தார். 

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி கடந்த 29-ம் தேதி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதால் நாடே கொண்டாட்டத்தில் ஆழ்ந்தது.

டி20 உலகக் கோப்பை ஆரம்பித்த போது அதன் முதல் கோப்பையை கைப்பற்றியதே இந்திய அணி தான். ஆனால் இந்திய அணி இரண்டாவது கோப்பையை கைப்பற்ற 13 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 13 வருடங்களுக்கு பிறகு அந்த வெற்றி ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியால் சாத்தியமானது.

இந்த வெற்றி அணியின் வீரர்கள், பயிற்சியாளர்,  நிர்வாகம், தேர்வுக் குழு, மருத்துவக் குழு உள்ளிட்ட அனைத்து தரப்புக்குமே சொந்தமானது என்பது போல.., கவனிக்கப்படாத சிலருக்கும் இந்த வெற்றி சொந்தமானது. அதில் முக்கியமானர்கள் தான் டி20 உலகக் கோப்பைக்கான  இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்தவர்கள். டி20 உலகக் கோப்பை வெற்றியை கொண்டாட மும்பை வான்கடே மைதானத்தில் நீலக் கடலே கூடியிருந்தது இதற்கு சாட்சி.

இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைத்தவர் காஷ்மீரைச் சேர்ந்த துடிப்பான இளம் ஆடை வடிவமைப்பாளரான ஆகிப் வானி. இவர் தலைமையிலான குழுதான் இந்திய அணியின் ஜெர்சியை பல கட்ட சோதனைகளுக்கு பிறகு வடிவமைத்திருந்தது.  ஆகிப் வானி தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவில் முக்கிய நபராக இருந்தவர் நிகில் ஷங்கர். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளராவார்.

இந்த குழுவினர் ஆரம்பத்தில் காஷ்மீரில் உள்ள கால்பந்து அணிக்கான ஜெர்சியை வடிவமைத்துள்ளனர்.  இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான ஜெர்சியை வடிவமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர் இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைப்பதற்கான வாய்ப்பை பிசிசிஐ வழங்கியுள்ளது.

தற்போது இந்த குழு தான் ஒலிம்பிக் போட்டிக்கான ஜெர்சியையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளாரான நிகில் ஷங்கர் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரான பிரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் விஜய்சங்கர் ராமச்சந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.