சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் பெற விண்ணப்பித்து, 4 நாட்களுக்குள் கிடைக்காவிட்டால், மாவட்ட ஆட்சியர் அல்லது அமைச்சரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம் என வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 300 ஒய்வூதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்துபேசிய அவர், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வருமான சான்றிதழ் ஜாதி சான்றிதழ் விண்ணப்பித்து நான்கு நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் இதில் காலதாமதம் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அல்லது அமைச்சரிடமும் நேரில் புகார் அளிக்கலாம் என்று கூறினார். மேலும் முதியோர் உதவித் தொகையை விரைவில் ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







