பணமதிப்பிழப்பு நடவடிக்கை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்தியில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பழைய  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து…

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி மத்தியில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பழைய  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து 8 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீது இன்று தனது உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியது.

நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில்,  நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்ற தீர்ப்பினை வழங்கினர். இதற்கு மாறுபட்ட தீர்ப்பை நீதிபதி பி.வி.நாகரத்தினா வழங்கினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது என தனது தீர்ப்பில் அவர் கூறினார். எனினும் 4-1 என்கிற பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

1) மத்திய ரிசர்வ் வங்கியுடன் 6 மாதம் கலந்தாலோசித்த பின்னரே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுத்தவிதத்தை குறை சொல்ல முடியாது.

2) பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் அதன் நோக்கங்களான கறுப்பு பண ஒழிப்பு, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி செய்வதை தடுத்தல் போன்றவற்றுக்கும் ஒரு கணிசமான தொடர்பு இருக்கிறது.

3) பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுமா என்பதை தீர்மானிக்க அந்த நடடிக்கையின் நோக்கங்கள் நிறைவேறியுள்ளதா, இல்லையா என்பதை கருத்தில்கொள்வது பொருத்தமானதாக இருக்காது.

4) செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள 52 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது போதுமான காலம் அல்ல என்ற வாதத்தை ஏற்க முடியாது. இதற்கு முன்பு கடந்த 1978ம் ஆண்டு  பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை மாற்றிக்கொள்ள முதலில் 3 நாட்களே கால அவகாசம் வழங்கப்பட்டன. பின்னர் மேலும் 5 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.

5) பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவுகளில் அதனை மேற்கொள்ளும் அரசு நிர்வாகத்தின் நிபுணத்துவத்தை மீறி உச்சநீதிமன்றம் தனது நிபுணத்துவத்தைக்கொண்டு முடிவெடுக்க முடியாது.

6) பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கிக்குப் பதில் மத்திய அரசு முன்னெடுத்தது என்பதற்காகவே அந்த நடவடிக்கையை தவறான நடவடிக்கையாக கருதமுடியாது.

7) ரிசர்வ் வங்கி  சட்டம்  26(2),  எந்த எண் வரிசையிலான ரூபாய் நோட்டுக்களையும், மதிப்பிழப்பு செய்வதற்கு அதிகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் மொத்த ரூபாய் நோட்டுக்களையும் பணமதிப்பிழப்பு செய்ய முடியும்.

8) சட்டப்பிரிவு 26(2),  தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதால், அந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதை அதிகார மீறலாக கருதமுடியாது. எனவே இந்த நடவடிக்கையை அரசியல்சாசனத்திற்கு முரணானதாகவும் கருத முடியாது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

1.பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான ஆவணங்களில், ”மத்திய அரசு விருப்பப்படி”,  ”ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை திரும்பப்பெற மத்திய அரசு பரிந்துரைத்தது” என்பது போன்ற வாக்கியங்களை மத்திய ரிசவ் வங்கி பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த முக்கியமான விஷயத்தில் ரிசர்வ் வங்கி சுயமாக சிந்தித்து முடிவெடுக்கவில்லை என்பது தெரிகிறது.

2. ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை பணமதிப்பிழப்பு செய்யும் நடவடிக்கை தொடர்பான மொத்த செயல்முறைகளும் 24 மணி நேரத்திற்குள்ளாக நடத்திமுடிக்கப்பட்டுள்ளன.

3) ரிசர்வ் வங்கி சட்டம் 26(2)ன்படி எடுக்கப்படதாக கூறப்படும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ரிசர்வ் வங்கியால் முன்னெடுக்கப்படவில்லை. மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையையும், மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையையும் ஒன்றாக கருத முடியாது.

4) ரிசர்வ் வங்கி சட்டம் 26(2) குறிப்பிட்ட எண் தொடர்கள் கொண்ட ரூபாய் நோட்டுக்களை பணமதிப்பிழப்பு செய்யத்தான் அதிகாரம் அளிக்கிறது. அனைத்து நோட்டுக்களையும் பணமதிப்பிழப்பு செய்ய அதிகாரம் அளிக்கவில்லை.

5) ரூபாய் நோட்டுக்களை ஒட்டுமொத்தமாக பணமதிப்பிழப்பு செய்வது மிகவும்  முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், அதனை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுதல் மூலமே மேற்கொள்ள வேண்டும். அரசின் ஒரு அரசாணை மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது.

6) நாடாளுமன்றம் ஒரு நாட்டின் மாதிரி வடிவம். ஜனநாயகத்தின் மையமாக விளங்கும் நாடாளுமன்றத்தை மிகவும் முக்கியத்துவமான ஒருவிஷயத்தில் ஒதுக்கிவைக்க முடியாது.

7) பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்கூட்டியே விவாதித்திருக்க வேண்டும்.

8) பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கத்தை குறைகூறமுடியாது என்றாலும் அந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டவிதம் சட்டத்திற்கு முரணாக உள்ளது. அதே நேரம் 2016ம் ஆண்டு நிகழ்ந்த இந்த விஷயத்தில்,  ஏற்கனவே இருந்த நிலை தொடர வேண்டும் என தற்போது உத்தரவிடமுடியாது.

9) செல்லத்தகாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் மதிப்பில் 98 சதவீதம் மதிப்புள்ள நோட்டுக்கள் வங்கிகளில் மாற்றப்பட்டு செல்லத்தகுந்த ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் விடப்பட்டன.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்பார்த்த பலனைக்கொடுக்கவில்லை என்பதையே இவை உணர்த்துகின்றன.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.