“கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் மோடியின் படம் திடீரென நீக்கம்” – சுகாதார அமைச்சக அதிகாரிகள் விளக்கம்!

மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கி,  உலகம் முழுவதும் பரவிய…

மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கி,  உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 5,33,586 பேர் பலியாகினர்.  மொத்தம் மூன்று அலையாக பரவிய கொரோனா வைரஸால் இதுவரை தமிழ்நாட்டில் 36,11,852 பேர் பாதிக்கப்பட்டு,  38,086 பேர் உயிரிழந்தனர்.

இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்க ஒட்டுமொத்த மருத்துவ துறையுமே போராடியது. அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாக்கான தடுப்பூசியை உருவாக்கின. அந்தவகையில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி,  நோவாக்ஸ்,  பைஃசர் என பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் இந்தியாவில் கோவாக்சின்,  கோவிஷீல்டு மருந்துகள் தான் அதிகம் போடப்பட்டது.

இதையும் படியுங்கள் : கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்!

அந்தவகையில், இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதன் பக்கவிளைவுகள் பற்றிய சமீபத்திய செய்திகள் கவனம் பெற்று வருகின்றன.

சில தினங்கள் முன் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்தியாவில் இந்த ஊசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் கோவின் (CoWIN) சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக, கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் இந்த கோவின் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் உருவமும், கூடவே, “ஒன்றாக இணைந்து, இந்தியா கோவிட்-19-ஐ தோற்கடிக்கும்” – என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும். ஆனால், தற்போது இதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. எக்ஸ் தள பயனர்கள் பிரதமர் மோடியின் புகைப்பட நீக்கம் குறித்து பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,

“மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. மோடியின் புகைப்படம் நீக்குவது முதல்முறையல்ல. கடந்த 2022ம் ஆண்டில், நடந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா தேர்தல்களிலும் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது”

இவ்வாறு சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.