கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தனியார் பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் 17-ம் தேதி வன்முறையாக மாறியது.
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 2 முறை மாணவியின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தங்களது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தி நல்ல முறையில் அடக்கம் செய்தனர். இதனிடையே, மாணவி உயிரிழப்புக்கான காரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், பள்ளி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் எதிரொலியாக பள்ளிக்கல்வித்துறை சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று ஆசிரியர்கள் பள்ளியில் நடந்து கொள்ளும் முறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளிட்டது. அந்த வரிசையில், தனியார் பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தற்போது உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளனவா? விடுதிக் கட்டடங்கள், தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் Residential பள்ளி கட்டடங்கள் உரிய அனுமதி பெற்றுள்ளனவா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








