”பிட் அடித்த மாணவர்கள்”; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு பிட் எடுத்துச் சென்ற விவகாரத்தில் தேர்வறை கண்காணிப்பாளர்களை சஸ்பெண்ட் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ம் தேதி முதல்…

மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு பிட் எடுத்துச் சென்ற விவகாரத்தில் தேர்வறை கண்காணிப்பாளர்களை சஸ்பெண்ட் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொதுத் தேர்வை கண்காணிக்க  ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் தேர்வில் முறைகேடான செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கான தண்டனைகளும் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்வு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள் தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன்.குமார் கடந்த 9-ம் தேதி நாமக்கல் எஸ்ஆர்வி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த போது, பள்ளியின் முதல்வர் வளாகத்திற்குள் உள்ளே இருப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதேபோல் 16-ம் தேதி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆய்வுக்கு சென்றபோது ஜெராக்ஸ் கடையில் மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்விற்கு முன்னதாக மைக்ரோ ஜெராக்ஸ் போட்டு எடுத்துச்செல்வதை பார்த்து,  மாணவர்களிடம் இருந்த பிட் பேப்பர்கள் அனைத்தும் தேர்விற்கு முன்னதாகவே பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஜெராக்ஸ் கடையில் இதுபோன்ற பணிகளை செய்தால் கடையை மூடுவோம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதம், விலங்கியல் பாடத் தேர்வை கண்காணிக்க சென்றபோது  நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களை இணை இயக்குநர் ஆய்வு செய்தார். அப்போதும் தேர்வு துவங்குவதற்கு முன்னரே மாணவர்களிடம் இருந்த பிட் பேட்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து மாணவர்கள் தேர்வில் முறைகேடாக பிட் அடிக்க உதவியாக செயல்படும் தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 11 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து, வேறு ஆசிரியர்களை தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமித்து தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மாவின் பரிந்துரையின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.