சாத்தான்குளத்தில் தனியார் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கிச் செல்வதால், கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை நாசரேத்
பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
ஆனால், இந்த நேரத்தில் ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே செயல்படுகிறது.
இதனால், பேருந்து வசதி இல்லாமல் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் செல்கின்றனர். ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்தில் சிக்கி சில நேரங்களில் உயிரிழக்க நேரிடும் எனவும் பெற்றோர்கள் அச்சம் அடைகின்றனர்.
இவ்வாறு பயணம் செய்கையில் பேருந்து நிறுத்தங்களில் ஏறி இறங்கும் பள்ளி,
கல்லூரி மாணவிகள் மீது படிக்கட்டில் தொங்கிச் செல்லும் ஒரு சில மாணவர்கள்
வேண்டத்தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கி உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தினமும் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-ம.பவித்ரா








