முக்கியச் செய்திகள் சினிமா

லெஜெண்ட் சரவணன் கடந்து வந்த பாதை!

லெஜெண்ட் சரவணன் கடந்து வந்த பாதை குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்…

திரைத்துறையில் ஹீரோகவாக அறிமுகமாகும் நபர்கள், ஒரு கட்டத்தில் அரசியல்வாதியாகவோ அல்லது தொழிலதிபராகவே மாறி செட்டில் ஆகிவிடுவர். ஆனால், இதற்கு நேர்மாறாக நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட லெஜண்ட் சரவணா ஸ்டோரின் நிர்வாக இயக்குநரான லெஜண்ட் சரவணன் தொழிலதிபர் என்ற ஸ்தானத்திலிருந்து நடிகராக மாறியிருக்கிறார். இது பலருக்கும் வியப்பாக இருந்தாலும், ஒரு வெற்றிகரமான நிறுவனத்தின் உரிமையாளரான லெஜெண்ட் சரவணன் கடந்த வந்த பாதை குறித்த ((தேடலுக்கும்)) தேடலில் பலர் இறங்கியுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனைச் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களைக் கவர திரைத்துறையில் முன்னணி ஹீரோ மற்றும் ஹீரோயின்களைத்தான் தங்களுடைய நிறுவனத்தின் விளம்பரத்திற்கு மாடலாக அழைத்து வருவது வழக்கம். ஆனால், அந்நிறுவனத்தின் வெற்றிக்கு உழைத்த முதலாளிகள் என்றைக்கும் திரைக்குப் பின்னால்தான் இருப்பார்கள். இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் முதலாளி யார் என்பதே பலருக்கு தெரியாமலேயே இருக்கும். ஆனால் இந்த பிம்பத்தைத் தமிழ்நாட்டில் உடைத்தெறிந்தார் லெஜண்ட் சரவணன். தங்களுடைய நிறுவனத்தில் விற்பனைச் செய்யப்படும் பொருட்கள் குறித்து வெறும் வாய்ப்பாடாக ஒப்பித்துச் சொல்லும் நிறுவனர்களுக்கு மத்தியில், ஒரு விளம்பர மாடலுக்கு இணையாக தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் திறக்கப்பட்டபோது அதனுடைய Promotion வீடியோக்களில் ஆட்டம் பாட்டத்துடன் களமிறங்கினார் சரவணன்.


தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் என்ற பெயரே வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் முறையாக காட்சி ஊடகத்தில் விளம்பரத்தின் வழியே தோன்றிய சரவணன் அப்போது முன்னணி ஹீரோயின்களாக இருந்த ஹன்சிகா மற்றும் தமன்னா ஆகியோருடன் விளம்பர விடியோவில் ரொமான்ஸ் காட்டி பட்டையை கிளப்பினார். குறிப்பாக தீபாவளி விளம்பரங்களில் புத்தாடை அணிந்து திரை நடிகைகளுடன் லெஜண்ட் சரவணன் நடித்திருந்தது ஒரு பிரிவினருக்கு வயிற்றெரிச்சலையே கொடுத்தது. சரவணனை ஆதரித்தவர்கள் வரவேற்க, எதிர்த்தவர்கள் சரவணனுக்கெல்லாம் நடிப்பு தேவையா என்பது போல பேசினர். மூத்த நடிகர் ராதாரவி போன்றவர்களே, சரவணனின் வருகையை விமர்சித்து பேசிய வீடியோக்களும் இணையத்தில் வெளியானது.

2017ம் ஆண்டு இணையப் பக்கங்களில் வெளியான செய்திதான் அப்போதைய ஹாட் டாப்பிக்காக இருந்தது. நயன்தாராவுடன் லெஜண்ட் சரவணன் இணையப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி. அதாவது நயன்தாராவுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க போவதாக யாரோ ஒருவர் கொளுத்திப் போட, காட்டுத்தீப் போல பரவியது. ஹன்சிகா, தமன்னா போன்றவர்களுடன் விளம்பரப் படங்களிலும் நடித்திருந்ததால், நயனுடன் கூட்டணி சேரலாம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அப்படி, வெளியான தகவல் வதந்தி என்றும், அவ்வாறு சினிமாவில் நடிக்கும் எண்ணம் சரவணனுக்கு இல்லையென்றே சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. இதற்கிடையே குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றவர், 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வேலை சுவாமிக்கு காணிக்கை செலுத்தியதாக புகைப்படம் வெளியானது.

“யாரோ ஒரு விளம்பர மாடலுக்கு பணம் செலவழித்து நிறுவனத்தின் பொருட்களை விற்பனைச் செய்வதைவிட அந்த பொருட்களைத் தயாரித்து விற்பனைச் செய்யும் உரிமையாளரே விளம்பரங்களில் நடிப்பதில் தவறில்லை” அனுபவசாலிகளின் வாதம்தான் சரவணனுக்கு உத்வேகத்தை கொடுத்தது. கிண்டல் செய்பவர்கள் அதைத்தான் செய்வார்கள் என்று புரிந்துகொண்ட சரவணனும், தன்னுடைய தோற்றம் நிறம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல், கேமராக்களுக்கு முன்னால் தைரியமாகத் தோன்றி, தன்னுடைய ஜவுளி விற்பனையகத்தின் சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதில் உற்சாகமாகச் செயல்பட்டார். தொடக்கத்தில் இப்படித்தான் பேசுவார்கள், நாளடைவில் அந்த மனநிலை மாறிவிடும் என்றார் சரவணன். அவர் சொன்னதுபோலவே வாடிக்கையாளர்களின் மனப்போக்கும் மாறிபோனது. இதன் காரணமாகதான் லெஜண்ட் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் மற்றொரு அடையாளமாக மாறினார் லெஜண்ட் சரவணன். தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரங்களில் தானே நடிக்கவேண்டும் என்ற சரவணனின் முடிவுக்கு காரணம், விளம்பரத்துறை மீதான நம்பிக்கையும், நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்கிற வர்த்தக வியூகமும்தான்.

சரவணனின் இந்த தொழில் தந்திரம், எதிர்பார்த்தபடியே நல்ல பலனைக் கொடுத்தது. அந்த விளம்பரம் சென்னையின் தியாகராய நகரை மட்டுமே குறிவைத்து குவிந்திருந்த வாடிக்கையாளர்களை, புறநகர் பகுதியான அம்பத்தூர் அருகேயுள்ள பாடியை நோக்கியும் கொண்டுவந்து சேர்த்தது. பிரம்மாண்ட 10 மாடி கட்டடத்தில் சாதாரண குண்டு ஊசி முதல் வைர வைடூரியங்கள் வரை, அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் கடை உருவாக்கப்பட்டு இருந்தது. 2016ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்நிறுவனத்தின் திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து, நடிகர் மாதவன், ஹன்சிகா, தமன்னா ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒட்டுமொத்த பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் மக்களுக்கு மகிழ்ச்சிதானே. இதனால், ரங்கநாதன் தெருவை நோக்கி சென்றுகொண்டிருந்த மக்கள் கூட்டம் பாடி பக்கம் திரும்பியது. இந்த வளர்ச்சியின் எதிரொலியாக, நாடு முழுவதும் பல்வேறு கிளைகளும் திறக்கப்பட்டன. இதற்கெல்லாம் அடித்தளமாக அமைந்தது சரவணன் உள்ளிட்டோரின் உழைப்புதான். லெஜண்ட் சரவணன் விளம்பரத்தில் தைரியமாக காலடி எடுத்து வைத்தது, பின்னாளில் வேறுபல நிறுவன உரிமையாளர்களுக்கும் விளம்பரத்தில் நடிப்பதற்கான தைரியத்தை கொடுத்தது.

விளம்பரத் துறையிலும் வியாபாரத்திலும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள தி சரவணா ஸ்டோர் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக சந்தையான இந்தியாவில் ஆலமரத்தின் வேர் போல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது. இன்றைக்கு சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் என இந்தியாவிலேயே ஒரே குடும்பத்தினரால் நடத்தப்படும் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனம் என்ற வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் FAMILY SHOPPING ஸ்டோராக மாறியுள்ள சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் வரலாறு அரை நூற்றாண்டுகளைக் கடந்த வெற்றிப்பயணத்தைக் கொண்டுள்ளது. இன்றைக்கு மாபெரும் சாம்ராஜியமாக வளர்ந்துள்ள சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு முதல் பிள்ளையார் சூழியைப் போட்டவர் என்றால் அவர் அனைவராலும் அண்ணாச்சி என அன்போடு அழைக்கப்படும் செல்வரத்தினம்தான்.

செல்வரத்தினத்தின் தந்தை சண்முகசுந்தரம் இலங்கை சென்று வியாபாரம் செய்த அனுபவம் கொண்டவர். பின்னர் தான் சம்பாதித்த செல்வங்களுடன் தன்னுடைய சொந்த ஊரான தூத்துக்குடியில் உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு என்ற சிறு கிராமத்திற்கு வந்துச் சேர்ந்தார். அங்கு வயல்வெளிகளும் தோப்பு துரவுகளையும் வாங்கிப்போட்டு கவனித்து வந்துள்ளார். அத்துடன், ஓர் அரிசி ஆலையையும் நடத்திவந்தனர். அந்தச் சமயத்தில், அவரின் மூன்றாவது மகனான செல்வரத்தினத்துக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. அதனையடுத்துதான் சென்னைக்குச் சென்று மளிகைக் கடை வைக்க வேண்டும் என திட்டமிட்டார். அதனையடுத்த தன்னுடைய சேமிப்பை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், தனது உறவினர் பார்க்கச் சொன்ன சுந்தரம் காபி உரிமையாளர் சோமசுந்தரம் நாடாரைத் தேடிச் சென்றார். அவரிடம், ‘நான் ஒரு மளிகைக் கடை வைக்கலாம்னு இருக்கேன். அதுக்கு நீங்க உதவி பண்ணணும்’ என்று கேட்டார். அப்படி தி நகர் ரங்கநாதன் தெருவில் 1970ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி சண்முக ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சிறியாத ஒரு பாத்திரக்கடையை தொடங்கினார் செல்வரத்தினம்.

வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்க தன்னுடைய கடும் உழைப்பினால் வியாபாரத்தை விஸ்தரிக்க நினைத்த செல்வரத்தினம் ஊரில் இருந்த தன்னுடைய சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினத்தை அழைத்தார். பின்னர் மூன்று சகோதரர்களும் இணைந்து 1973ம் ஆண்டு சரவணா ஸ்டோர் என்ற பெயரில் ஜவுளிக் கடையைத் தொடங்கினார்கள். பின்னர் சகோதர்களின் கூட்டு உழைப்பால் வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியான சென்னையின் முதல் மல்டி ஸ்டோரி ஷாப்பிங் தளமாக ஒரு லட்சம் சதுர அடியில் ஐந்து மாடி கட்டிடமாக 1998-ல் விசாலமாக உருமாற்றம் அடைந்தது சரவணா ஸ்டோர்ஸ்.

சரவணா ஸ்டோர் இன்று அடைந்துள்ள வெற்றிக்கு முக்கிய காரணமே அவர்கள் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து செயல்படுவதுதான். ஒரு சாதாரண குண்டு ஊசி முதல் விலை உயர்ந்த வைர வைடூரியங்கள் வரையிலான பொருட்கள் வரை எல்லாத்தரப்பட்ட மக்களுக்கும் தேவையான பொருட்கள் கிடைக்கும் ஒரே இடமாக மாறியது சரவணா ஸ்டோர்ஸ். மக்களின் தேவை, சந்தையின் போக்கு எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து சிறு சிறு மாற்றங்களையும் விட்டுவிடாமல் செயல்படுத்தி மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்ததுதான் சில்லறை வர்த்தகத்திற்குப் பெயர் போன சரவணா ஸ்டோரின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக கூறப்படுகிறது. இதனால் எண் 45, ரங்கநாதன் தெரு என்ற முகவரி என்ற பெயர் மறைந்து சரவணா ஸ்டோர் நிறுவனம்தான் தி நகரின் அடையாளமாக மாறியது. சரவணா ஸ்டோரின் இந்த வளர்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாக இருந்தது அப்பகுதியில் அமைந்திருந்த பஸ் ஸ்டாண்டும், மாம்பலம் ஸ்டேஷனும்தான்.

எளிதான போக்குவரத்து வசதி இருந்த காரணத்தால் சென்னையில் ரங்கநாதன் தெரு முக்கிய வர்த்தக தளமாக உருவெடுக்கத் தொடங்கியது. அப்போதெல்லாம் டிவியில் விளம்பரங்களின் எண்ணிக்கையும் குறைவு என்பதால் செவி வழிசெய்தியாக மக்கள் மத்தியில் பிரபலமானது சரவணா ஸ்டோர்ஸ். அதன்பிறகு சென்னை விரிவடைந்து கொண்டே இருக்க, சரவணா ஸ்டோரும் அதற்கேற்ப விரிவடையத் தொடங்கியது. வர்த்தக தளமாக மாறிய தி நகரில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஏகப்பட்ட பிராண்டுகள் என ஏராளமானோர் இந்த தொழிலுக்குள் வர ஆரம்பித்தனர். ஆனால், அத்தனை போட்டிகளையும் தாண்டி சென்னையின் எல்லா பிரதான இடங்களிலும் சரவணா ஸ்டோரின் கிளை கடைகள் கால்பதித்தது. இப்போது சென்னையில் உள்ள சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா மற்றும் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என அனைத்து நிறுவனங்களிலும் கருப்பட்டி முதல் கம்ப்யூட்டர் வரை கிடைக்கிறது.

இதுபோன்ற ஒரு MULTI CONCEPTஐ முதல் முறையாக அறிமுகப்படுத்தியது சரவணா ஸ்டோர்தான். இந்நிலையில் 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் சென்னையில் அதிகளவு வர்த்தகம் நடைபெறும் தி நகருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் கூட்டம் ஒன்று அவரை சரவணா ஸ்டோர் கடைக்குள் கூட்டத்தோடு கூட்டமாக அழைத்துச் சென்றுள்ளார். கடையினுள் சென்ற அவர் சரவணா ஸ்டோரில் பொருட்களை காட்சிப்படுத்தும் விதம் மற்றும் அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்ததைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். பின்னர் அந்த தொழிலதிபர் தொடங்கிய நிறுவனம்தான் இன்றைக்கு நாட்டின் முக்கிய நிறுவனமாக உள்ள பிக் பஜார். அந்த தொழிலதிபர்தான பிக் பஜார் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி. பிக் பஜார் வளர்ச்சி குறித்து ஒருமுறை செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பிக் பஜார் நிறுவனத்தை தொடங்குவதற்கு உந்து சக்தியாக இருந்தது சரவணா ஸ்டோர்தான் என கூறினார் கிஷோர் பியானி. இன்றைக்கு சரவணா ஸ்டோரின் நிறுவனத்தை அக்குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறையினர் சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா மற்றும் தி லெஜெண்ட் சரவணா என வெவ்வேறு பெயர்களில் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர்களில் ஒருவரான யோகரத்தினத்தின் மகன் லெஜெண்ட் சரவணன் நடத்திவரும் தி லெஜெண்ட சரவணா ஸ்டோர் குறுகியகாலத்தில் தொடங்கப்பட்டாலும், தன்னுடைய விளம்பர யுக்தி மற்றும் அனைத்து வீட்டு உபயோக பொருட்களுக்கான பிரம்மாண்ட சில்லறை வர்த்தகம் காரணமாக வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனமாக உள்ளது.

இதற்கு காரணம் லெஜெண்ட் சரவணனின் வியாபார யுக்திதான் என்கிறார்கள் வல்லுநர்கள். அதேநேரம் வெறும் நிறுவனத்தின் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தாமல் கஜா புயல் பாதிப்பின்போது அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார். அதேபோல் தன்னுடைய சொந்த ஊரான பனிக்கர்நாடார் குடியிருப்பு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் ஆகியவை தொடர்ந்து இவர்களால் வழங்கப்பட்டுவருகிறது. மேலும் 2018ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற நடிகர் சங்க கலைநிகழ்ச்சி விழாவில், அச்சங்கத்தின் வளர்ச்சிக்காக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் முன்னிலையில் ரூபாய் 2 கோடிக்கான காசோலை வழங்கினார்.

ஒருபக்கம் தொழிலதிபராக வெற்றிபெற்றுள்ள லெஜெண்ட் சரவணன் தற்போது தமிழ் திரைத்துறையிலும் காலடி எடுத்துவைத்துள்ளார். தன்னுடைய கடைக்கு தான்தான் ஹீரோ என களத்தில் இறங்கிய லெஜெண்ட் சரவணன் தற்போது தைரியமாக தன்னுடைய முதல் படத்தின் மூலம் திரைத்துறையில் தடம் பதிக்கவுள்ளார். எதிர்மறையான விமர்சனங்களை தனக்கான வெற்றியாக மாற்றியுள்ள லெஜெண்ட் சரவணனின் விடமுயற்சி விஸ்வரூபா வெற்றியாக மாறுமா பொருந்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“டெல்டாவை விட ஒமிக்ரான் வீரியமானது அல்ல” -அமெரிக்க விஞ்ஞானி

Halley Karthik

பெண்கள் முகத்தை மறைக்கவில்லை எனில் சிறை

G SaravanaKumar

கேரளா தங்கக் கடத்தல் வழக்கு: பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்

Web Editor