சுமார் 100 ஆண்டு கால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா அந்த போட்டியை நடத்துகிறது. அடுத்த நூறாண்டுகளுக்கு அதன் நினைவுகள் நீங்காமல் இருக்கும் அளவிற்கு மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த செஸ் திருவிழாவிற்குள் ஒரு உணவுத்திருவிழா நடப்பதுபோல் விளையாட்டு வீரர்களுக்கும், பல்வேறு நாடுகளின் விளையாட்டுத்துறை பிரதிநிதிகளுக்கும் அறுசுவை உணவுகளை வழங்கி அசத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி அடுத்த மாதம் 10ந்தேதி வரை மொத்தம் 14 நாட்கள் 44வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுகிறது. 14 நாட்களிலும் எந்த ஒரு உணவு வகையும் திரும்ப பரிமாறப்படாத வகையிவ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் புதுப்புது உணவுவகைகளை தினமும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் உணவு கலாச்சாரத்திற்கு ஏற்ப 77 மெனுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த மெனுக்களில் சுமார் 3500 உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கின்றன.
காலை உணவு, மதிய உணவு, ஹை டீ, இரவு விருந்து என ஒரு நாளைக்கு 4 வேளைகள் விளையாட்டு வீரர்களுக்கு உணவு பதார்த்தங்களும், சூப், சாலட் போன்றவைகளும் பரமாறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பஃபேவில் பரிமாறப்படும் மெயின் டிஷ் மட்டுமே 700 வகைகளில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும் புதுப்புது உணவு வகைகள் வழங்க வேண்டும் எதுவும் ரிப்பீட் ஆகக் கூடாது என அரசு அதிகாரிகள் கூறியதால் மெனு பட்டியலை மீண்டும் மீண்டும் எழுதி பார்த்து முழு பட்டியலை தயாரிக்கவே ஒரு வாரம் ஆகியதாகக் கூறுகிறார் பிரபல சமையற்கலை நிபுணரான ஜி.எஸ்.தல்வார்.
சமையல் கலைத்துறையில் 52 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்தான் 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கான தலைமை செஃப். 4 மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்கள் 23, 2 மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்கள் 14 என மொத்தம் 37 ஓட்டல்கள் 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்விற்கான உணவுகளை தயாரிக்கும் பணியில் பங்கெடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உலகின் எல்லா கண்டங்கள், பிராந்தியங்களிலும் பிரசித்தி பெற்ற உணவு வகைகள் பரிமாறப்படும் அளவிற்கு 44வது செஸ் ஒலிம்பியாட்டுக்குள் ஒரு சர்வதேச உணவுத்திருவிழாவும் களை கட்ட உள்ளது.







