முல்லைப் பெரியாறு அணையை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுவிக்கிற்கு அவர் பிறந்த ஊரான இங்கிலாந்தின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் சிலை அமைக்கப்படவுள்ளது. இந்த சிலையை செப்டம்பர் மாதம் கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைக்கவுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிகுவிக்கிற்கு சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
செப்டம்பர் 10 ஆம் தேதி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பென்னி குவிக் சிலையை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாதமே பென்னிகுவிக்கின் சிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியமாறு அணையைக் கட்டியவர் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த பென்னிகுவிக்.
பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத் துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்தது. எனினும், கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இவரது முயற்சியால் தான் தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.








