14 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அவசியமில்லை என ஹரியான அரசு கடந்த 2008ல் கொள்கை திட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையில், 14 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், 14 ஆண்டுகள் தண்டனை முடிக்காத கைதிகளை விடுவிக்க அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும் இதில் ஆளுநர் மாநில அரசின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், சிறையில் தண்டனை பெறும் அனைத்து கைதிகளுக்கும் இந்த திட்டத்தை பாகுபாடில்லாமல் அமல்படுத்த வேண்டும் என்றும் அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின்படி இந்த திட்டத்தை திருத்தியமைக்கும் வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
தூக்கு தண்டனை கைதிகளை பொறுத்த அளவில், 14 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடையாமல் விடுவிக்கப்படக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.








