சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ( CMDA ) ஏன் 79 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு மாநில தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் 14 அடுக்கு வணிக வளாக கட்டிடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளித்தது. அனுமதியை தொடர்ந்து அங்கு கட்டட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆனால் பணிகள் தொடங்கும்போது, அங்கு கட்டடம் கட்டும் விவரத்துடன் கூடிய பதாகை வைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி நடைபெற்று வரும் நிலையில், கட்டட பணிகள் நடைபெறுகின்றதை சுட்டிக்காட்டிய மாநில தகவல் ஆணையம், பதாகை வைப்பதை உறுதிப்படுத்த தவறியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், 7,900 மாணவர்கள் பயிலும் பள்ளியில் பதாகை வைக்காததால் ஒவ்வொரு மாணவருக்கும் பாதிப்புகள் ஏற்ப்படக்கூடும் என்ற அச்சம் உள்ளதாக தெரிவித்த மாநில தவகவல் ஆணையம், ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 79 லட்சம் ரூபாய் அபராதத்தொகையை செலுத்த வேண்டும் என மாநில தகவல் ஆணையம் கணக்கீடு செய்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பள்ளி வளாகத்தில் கட்டடம் கட்டப்படுவதால் ஏற்படும் விளைவுகளை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்க வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.








