புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் ராஷ்மிகாவை விட தனக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியான ஃபர்ஹான திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இத்திரைப்படம், இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஃபர்ஹானா திரைப்படத்தின் ப்ரொமோஷனுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு நல்ல தெலுங்கு படத்தில் தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் தான் நடித்த ’வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ எனும் தெலுங்கு திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், தனக்கு தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரி மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
இதையும் படியுங்கள் : விமானத்தில் மகள் செய்த செயல்; ஆனந்த கண்ணீரில் மிதந்த தாய்; அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சி..!
மேலும் புஷ்பா படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயம் நடித்திருப்பேன் என்று தெரிவித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மிகவும் அருமையாக நடித்ததாக குறிப்பிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த கதாபாத்திரம் ராஷ்மிகாவைவிட தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கூறினார்.







