மணப்பாறை அருகே குடிநீர் குழாயில் சிக்கி உயிரிழந்த அணிலின் உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து குடிநீரில் கலந்து சென்றதை பல நாட்களாக துர்நாற்றம் வீசிவதாகவே நினைத்து அதை குடிநீராக கிராம மக்கள் குடித்து வந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள சிற்றூர் குப்பனார்பட்டி. இங்குள்ள குளத்தில் அருகே காவிரி குடிநீருக்காக 2004-ல் ரூ.6.20 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தோட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தொட்டி அமைக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை காவிரி குடிநீர் வரவில்லை. அதன் பின் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து நீர்தேக்க தொட்டிக்கு நீர் ஏற்றம் செய்து அருகிலுள்ள 20 குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், இதுவரை எந்த ஆண்டு, எந்த நாள், நீர்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டது என்பது அப்பகுதியில் உள்ள யாருக்கும் தெரியாது. சுத்தம் செய்ய வரும் தொழிலாளர்களும், நீர்தேக்க தொட்டி இரண்டாக விரிசல் விட்டு வருவதாலும், ஏணி படிக்கட்டுகளில் செடி கொடிகள் சுற்றி துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ள இரும்பு ஏணியாலும் மேலே ஏறி பணிசெய்ய அச்சமடைந்து வருகின்றனர். இதன் காரணமாகவே பல்லி, எலி, அணில் போன்ற விலங்குகள் நீரில் விழுந்து செத்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீரில் தொடர்ந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் யாரும் கண்டுக்கொள்ளாததைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்களே துர்நாற்றம் வந்த இடத்தில் குடிநீர் குழாயை தோண்டி பார்த்த போது அதில் அணில் ஒன்று உயிரிழந்து, அதன் உடல் முழுவதும் கரைந்து காணப்பட்டது.
மேல்நிலை தோட்டியில் விழுந்து உயிரிழந்த அணில் குடிநீர் விநியோகம் குழாய் வழியே சென்று தனிநபர் குழாயில் சிக்கிய நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையறியாமல் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாகவே குடிநீரை அப்பகுதி பொதுமக்கள் குடித்து வந்துள்ளனர். தற்போது உயிரிழந்த அணில் கிடைப்பெற்ற நிலையில், அணில் உடல் கரைந்து வந்த குடிநீரை பருகி வந்ததால் தங்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அப்பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை பலப்படுத்தவும், ஏணியினை சரி செய்து தரவும், தொட்டியினை சுத்தம் செய்து நீர் ஏற்றம் செய்யவும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சௌம்யா.மோ






