கொரோனா அச்சம் காரணமாக தீபாவளிக்கு இயக்கபடும் ரயில்களில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
ஓவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். இதற்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டின் நவம்பர் 2-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு கடந்த 2ம் தேதி முதல் தொடங்கியது.
அக்டோபர் 29ஆம் தேதி முதல் தீபாவளி அன்று வரை பயணிப்பதற்கான சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கி 10 நாட்கள் ஆகியும் பல ரயில்களில் இருக்கைகள் காலியாகவே உள்ளன. அதேபோல வட மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பெரும்பாலான ரயில்களிலும் முன்பதிவில் தொய்வு காணப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாகவும் பலர் ஏற்கனவே சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாலும் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.







