அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் என அறிவித்த அயோத்தி சாமியாரின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ம் தேதி தமுஎகச சார்பில் சென்னையில் “சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ இந்த மாநாட்டிற்கு சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்கவில்லை. சனாதன ஒழிப்பு மாநாடு என மிகச் சரியாக வைத்துள்ளீர்கள்.
சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதுதான் சிறந்தது. எப்படி டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்றவற்றையும் ஒழித்துள்ளோமோ அதே போல சாதி மற்றும் ஏற்றத் தாழ்வுககளை ஊக்குவிக்கும் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார்.
அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சாமியாரான பரமஹம்ச ஆச்சார்யா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவரது உருவ படத்தை வாளால் கிழித்தும், தீயிட்டும் எரித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்த நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







