இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ஏழை எளியவர்களுக்கு உதவிடும் நோக்கத்தில் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். மேலும் இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையை முடித்து விட்டு ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துகளை பரிமாற்றி கொண்டனர்.
இதேபோல், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். மீண்டும் பரவும் கொரோனா பிடியில் இருந்து உலகம் மீண்டு வர அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சிறப்பு தொழுகையை முடித்துவிட்டு, ஏழைகளுக்கு உதவிடும் நோக்கத்தில் குர்பானி எனப்படும் ஆட்டிறைச்சியை வழங்கினர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருநெல்வேல், கன்னியாகுமரி, மதுரை, சேலம், திருச்சி, விருதுநகர், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பக்ரீத் திருநாள் களைகட்டியது.
– இரா.நம்பிராஜன்








