சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள்: எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையம்?…

தீபாவளிக்காக சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்ல 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதனையடுத்து, சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை…

தீபாவளிக்காக சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்ல 6 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதனையடுத்து, சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்யும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதனால், பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவிக்கும்.

அந்தவகையில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9 ஆம் தேதி முதல் இயக்கப்படும்.  தமிழகம் முழுவதும் மொத்தம் 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில் சென்னையில் இருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பேருந்துகளுடன்,  கூடுதலாக 4,675 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும்.  மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக நவம்பர் 13 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இதற்காக சென்னையில் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம்,  தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம்,  தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்,  கே.கே.நகர்,  மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய 6 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.  மேலும், நகரின் முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லும் வகையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையம்:  சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை செல்லும்  பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்:  செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகள்

தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம்: திண்டிவனம்,  விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும்  பேருந்துகள்

பூவிருந்தவல்லி பணிமனை பேருந்து நிலையம்:  பூவிருந்தவல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் செல்லும்  பேருந்துகள்

கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம்:  கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி,  கடலூர் மற்றும் சிதம்பரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்:  திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்

பேருந்து பயண முன்பதிவிற்காக சென்னை 11 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன. தற்போது வரை 68000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து கார் மற்றும் இதர வாகனங்கள் மூலம் சொந்த ஊர் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, திருப்போரூர்- செங்கல்பட்டு வழி அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.