தனது வசீகர குரலால் தமிழ் நெஞ்சங்களை கட்டிப்போட்ட மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் பிறந்த நாளையொட்டி (ஜூன் 4) திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்.
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி கொரோனா காரணமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியனின் 76வது பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள நினைவிடத்தில் அவரது மகன் எஸ்பிபி சரண் மற்றும் அவரது உறவினர்கள் மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
எஸ்பிபியின் மணிமண்டம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நினைவிடத்தில் மரியாதை செலுத்த ரசிகர்களும், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர்.
மகன், உறவினர்கள் மரியாதை
எஸ்பிபி நினைவிடத்தில் அவரது மகன் எஸ்பிபி சரண் மற்றும் அவரது உறவினர்கள் ரசிகர்கள் தாமரைப்பாக்கம் சுற்றுவட்டார பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் மணிமண்டபம் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது.
-மணிகண்டன்









