6 வயது சிறுமி தனது தாய்க்காக எழுதிய கடிதம் ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
நம் வாழ்வில் சின்ன சின்ன பாராட்டுகள் அந்த நாளையே பிரகாசமாக்கும் வல்லமையை கொண்டவை. அதிலும் பணியில் இருந்து கொண்டே குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் என்றால் அதில் கிடைக்கும் சந்தோஷம் இரட்டிப்பாக இருக்கும். அப்படித்தான் 6 வயது பெண் குழந்தை தன் அம்மாவுக்கு எழுதியுள்ள ஓர் குறிப்பு சமூகவலைதளங்களில் ஹார்ட்டின்களை குவித்து வருகிறது.
Shematologist MD என்ற ட்விட்டர் பயனாளர் தன் பக்கத்தில் காகிதத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு குறிப்பை பகிர்ந்துள்ளார். அதில், ‘அன்புள்ள அம்மா.. உங்களுக்கு கடினமான நாளாக அமைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.’ என்று கூறியுள்ளார். குறிப்பின் கீழே இரண்டு ஹார்ட்டின்களையும் வரைந்துள்ளார். தன் 6 வயது மகளின் இந்த பேரழகான குறிப்புடன், ‘இப்போது தான் இது கண்ணில்பட்டது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை இதை பத்திரமாக பாதுகாப்பேன்.’ என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். ‘இந்த அழகியலை ஃபிரேம் போட்டு அலுவலகத்திலோ, காரிலோ, உங்களுக்கு எங்கு வேண்டுமோ மாட்டிக் கொள்ளுங்கள். என்றைக்காவது மோசமான நாள் வரும்போது அதைப் பாருங்கள். கவலைகள் எல்லாம் பறந்து போகும்.’ என்று கூறியுள்ளனர்.
-ம.பவித்ரா








