விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்யதுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஒரே நாளில் 2 இடங்களில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.சிவகாசி அருகே உள்ள M.புதுப்பட்டி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதேபோல், மாறனேரி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் வேம்பு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன், தென் மண்டல டிஐஜி ரம்யா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து,பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என அவர் ஆணையிட்டுள்ளார். மேலும், வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கணேசன், வெடி விபத்து சம்பந்தமாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்த ஆய்வு கூட்டத்தில் இது போன்ற பட்டாசு ஆலைகளில் விபத்துகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையி, பட்டாசு ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி(வயது 44), மேற்பார்வையாளர் கனகராஜ் (வயது 41), மேலாளர் ராம்குமார் (வயது 27) ஆகிய மூவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த எம்.புதுப்பட்டி போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







