நீட், ஜே.ஈ.ஈ. ஆகிய நுழைவுத் தேர்வுகளை கியூட் (CUET) தேர்வுடன் இணைத்து அனைத்துப் படிப்புகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வை கொண்டு வருவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டுள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் தற்போது நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல ஐஐடிக்கள், என்ஐடிக்கள் போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜே.ஈ.ஈ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதுதவிர நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளைநிலைப் படிப்புகளில் சேருவதற்கு கியூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ ஆகிய இரண்டு நுழைவுத் தேர்வுகளையும் சி.யூ.ஈ.டி நுழைவுத் தேர்வுடன் ஒருங்கிணைத்து அனைத்து படிப்புகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு கொண்டு வருவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு திட்டமிட்டுள்ளது. இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களில் மாணவர்கள் மூன்று நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்குப் பதிலாக ஒரே பொது நுழைவுத் தேர்வெழுதி வேறுபட்ட துறைகளில் படிப்பதற்கான வாயப்புக்களை பெறலாம் என பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் எம்.ஜகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு குழு ஒன்றை அமைத்து சம்பந்தப்பட்ட அனைவரோடும் ஆலோசனை நடத்தி கருத்துக்களைக் கேட்டறியவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரே அறிவுத் தளத்தில் மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுவதைத் தடுக்கும் நோக்கிலேயே அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
-ம.பவித்ரா








