தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி இல்லாதது குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் இன்று முதல் பீஃப் பிரியாணி இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பாக தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத் துறை சென்னை சார்பில் உணவுத் திருவிழா ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு வகையான உணவுகள் இடம் பெற்றிருந்த நிலையில், பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. இதனைத் தொடர்ந்து இன்று பீப் பிரியாணிக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பிரபல சுக்குபாய் பிரியாணி கடை இடம் பெற்றுள்ளது. இது உணவுப் பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து, சுக்குபாய் பிரியாணியின் உரிமையாளர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத் துறை நடத்தும் உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அனுமதி அளிக்கப்படாமல் இல்லை. எங்களுக்குத் தகவல் தெரியாமல் இருந்தது. அதனால் கேட்காமல் இருந்தோம். தகவல் தெரிந்த உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் அதிகாரிகளிடம் அணுகி அனுமதிக்க கேட்டோம். அனுமதி அளித்து உடனே பீப் பிரியாணி செய்து உணவுத் திருவிழாவில் வைக்கச் சொன்னார்கள் என்றார்.
-ம.பவித்ரா








