“நேரு காலத்திலிருந்து காங்கிரஸ் முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது” – பாஜக குற்றச்சாட்டு!

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் கர்நாடக அரசின் திட்டத்தை அனைத்து மட்டங்களிலும் எதிர்த்துப் போராடுவோம் என பாஜக தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ், அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை அனைத்து வகையிலும் எதிர்த்து போராடுவோம் எனவும் பாஜக தெரிவித்துள்ளது.

இந்த முடிவை திரும்பப் பெறும் வகையில் நீதிமன்றத்தில் முறையிடுவோம் எனவும் தெரிவித்துள்ளது. 4 சதவீத ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்த மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது ரூ.2 கோடி வரை மதிப்புள்ள (சிவில்) பணிகளில் 4 சதவீத ஒப்பந்தங்களையும், ரூ.1 கோடி வரையிலான goods/services ஒப்பந்தங்களையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குகிறது.

இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா,

“நாட்டில் முதல் முறையாக, மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகக் கூறும் ஒரு அரசாங்கம், மாநிலத்தில் மத மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இந்த அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை நீதிமன்றத்தில் முறையிடப்படும். பாஜக இந்த நடவடிக்கையை எதிர்த்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும், தெருக்களிலும் போராடும்.

இந்த பிரச்சினையை நாங்கள் நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம் , இதற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்துவோம். அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை திரும்பப் பெறப்படும் வரை, பாஜகவின் போராட்டம் தொடரும்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பதவிக்காலத்தில் இருந்து, காங்கிரஸ், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை விட முஸ்லிம் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது” என்றார். மேலும் கர்நாடக அரசின் பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்மொழிவது “அரசியலமைப்புக்கு முரணானது” என்றும் சூர்யா கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.