கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் பாடல்களை டிரம்ஸ் மூலம் இசைத்து சிவமணி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த 16ம் தேதி நடை
திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு வெகுவிமரிசையாக மண்டல பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சபரிமலைக்கு வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. நேற்றுமுன்தினம் சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதேபோல் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுவரை 7 லட்சம் பக்தர்களுக்கு மேல் சபரிமலையில் ஐயப்பனை
தரிசித்துள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் ட்ரம்ஸ் சிவமணி இருமுடி கட்டி சபரிமலை வந்து தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் இம்முறையும் சபரிமலைக்கு
வந்து ஐயப்பனை தரிசித்தார்.
அங்கிருந்த ஐயப்ப பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடைபந்தலில் உள்ள மேடையில் டிரம்ஸ் இசை மூலம் ஐயப்பனின் புகழ் இசையை இசைத்து காட்டினார். டிரம்ஸ் சிவமணியின் இசையை அங்கிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.







