”செந்தில் பாலாஜி தரப்பு நாளை வாதங்களை நிறைவு செய்ய வேண்டும்” – மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், நாளை வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநிதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அமைச்சர்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையில், நாளை வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநிதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வைத்த வாதங்களாவது:

அமலாக்கத் துறையினர் காவல்துறையினர் அதிகாரிகள் கிடையாது அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். இந்த விவகாரத்தில் எழும் கேள்வி என்பது, விசாரணையை நடத்தி வாக்குமூலங்களை பெற்று அவற்றை குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியும் ஆனால் அமலாக்கத்துறையால் நேரடியாக கைது செய்து விசாரணை நடத்த முடியுமா ? என்பது தான். ஒருவரை கைது செய்வதற்கான அதிகாரங்கள் அமலாக்கதுறையினருக்கு கொடுக்கப்படாத நிலையில் எப்படி கைது செய்ய முடியும்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எவ்வளவு நேரம் வாதங்களை முடிக்க எடுத்துக் கொள்வீர்கள் என்று வினவினார். அதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், குறைந்தபட்சம் ஒரு நாள் தேவைப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து வழக்கறிஞர் கபில் சிபில் வைத்த வாதங்களாவது :

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167 இன் படி 24 மணி நேரத்தில் விசாரணையை முடிக்க முடியாது என தோன்றினால் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு உட்பட்டதே தவிர இதன் அடிப்படையில் செயல்பட அமலாக்க துறையினருக்கு அதிகாரம் கிடையாது. அதேவேளையில் அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகளாக கருதப்படும் வரை இந்த வேறுபாடு என்பது சிக்கலானது. வழக்கில் தான் குற்றம் சாட்டப்பட்டவராகவே இருப்பினும், தான் சட்ட விதிகளின் படி தான் நடத்தப்படுகின்றேனா ? என்பதை தெரிந்து கொள்ளவும், உறுதிப்படுத்தவும் செந்தில் பாலாஜிக்கு உரிமை உள்ளது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்களை கையகப்படுத்துவது, சொத்துக்களை முடக்கி வைப்பது என நிதிசார்ந்த விசயங்களை முடக்கவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை ஒருவரை விசாரணைக்காக கைது செய்ய முடியாது, நீதிமன்ற விசாரணைக்கு தான் அனுப்ப முடியும் என்று கூறுகிறீர்கள், அப்படி நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பினால் எவ்வாறு விசாரணை நடத்த முடியும்? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், ஒரு வழக்கின் தீவிரத்தைப் பொறுத்து அதை சம்மந்தபப்ட்ட நீதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், ஒரு தனிநபர் இன்னொரு தனி நபரை கூட பிடித்து வைக்க முடியும் ஆனால் அவரால் நீதிமன்றத்தின் மூலமாக ரிமாண்ட் செய்ய முடியுமா ? நிச்சயம் முடியாது. அதுபோல்தான் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தில் இல்லாத “கைது” என்ற நடவடிக்கை எடுப்பது ஆகும். குற்றச்சாட்டப்பட்டவர் நீதிமன்ற காவலில் இருக்கும்போது நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை சிறையில் சென்று தான் விசாரிக்க முடியுமே தவிர மாறாக தாங்களாகவே கைது செய்து விசாரிக்க முடியாது அதற்கு அமலாக்கதுறைக்கு அதிகாரம் இல்லை, சட்டத்திலும் இடம் இல்லை. ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சட்டத்தில் இல்லாததை தான் அமலாக்கத்துறை செய்திருக்கிறது இவ்வாறு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் வாதங்களை முன்வைத்தார்.

இதனை அடுத்து செந்தில் பாலாஜி மனைவி மனு மீது தனியாக வாதங்களை முன்வைக்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கு மேகலா தரப்பு, தாங்கள் தொடர்ந்த மேல்முறையீடு தனி விவகாரம் எனவே தங்கள் சார்பிலும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்நிலையில் தங்களது வாதத்தை தொடர்ந்த அமலக்கத்துறை, குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167ன் கீழ் 60 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் அந்த வகையில் ஆகஸ்ட் 14ம் தேதி தான் கடைசி தினம் எனவே அதற்குள் இந்த வழக்கில் முடிவு எட்டப்படவில்லை என்றால் செந்தில் பாலாஜியிடம் தங்களால் விசாரணை நடத்த முடியாமல் போகலாம் என வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும், ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடர்ச்சியாக அரசியல் சாசன அமர்வு அமர இருப்பதால் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை அடுத்து வழக்கை நாளைய தினத்துக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  நாளை செந்தில் பாலாஜி தரப்பு தங்களது வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.