அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மியாமி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், பதவிக் காலம் முடிந்தும் முக்கிய ஆவணங்களை ஆவண காப்பகத்திடம் ஒப்படைக்கவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்த எஃப்.பி.ஐ அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட 37 குற்றச்சாட்டுகள் மியாமி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், அணு ஆயுதம், ராணுவம் உள்ளிட்டவை தொடர்பானவை எனவும், அவை ட்ரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் பாதுகாப்பற்ற முறையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தேசிய ஆவணக் காப்பகம் நடத்திய விசாரணைக்கு பின் டிரம்ப் அந்த ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.
முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் மியாமி நீதிமன்றம் கடந்த வாரம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, டிரம்ப் நேற்று பிற்பகல் மியாமி நீதிமன்றத்தில் ஆஜரானாா். இதனிடையே, நீதிமன்றம் வளாகத்துக்கு வெளியே கூடியிருந்த டிரம்ப்பின் ஆதரவாளா்கள் கோஷங்களை எழுப்பி அவரை வரவேற்றனா்.
அதேவேளையில், எதிா்ப்பாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறைக்குள் செய்தியாளா்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னதாக மியாமி நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.







