பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட மல்லையாவுக்கு தடை – 3ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவு!

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட  விஜய் மல்லையாவுக்கு செபி 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது…

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட  விஜய் மல்லையாவுக்கு செபி 3 ஆண்டுகளுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது பிரிட்டனில் தங்சம் அடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சி  மத்திய அரசின் சார்பில் நடைபெற்று வருகிறது. அவரது மகன் சித்தார்த்த மல்லையாவுக்கு கடந்த மாதம் லண்டனில் வெகு சிறப்பாகத் திருமணம் நடந்தது.

இந்நிலையில், பங்குச்சந்தை நடவடிக்கைகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 3 ஆண்டுகள் செபி தடை விதித்துள்ளது. இதற்கு முன்பும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கடந்த 2018 முதல் 2021-ஆம் ஆண்டு வரை, பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட விஜய் மல்லையாவுக்கு செபி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக செபி தலைமை பொது மேலாளர் அனிதா அனூப் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது..

‘’பங்குச்சந்தையில் தனக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களின் பங்குகளை தானே வாங்கி, விற்கும் நடவடிக்கைகளில் விஜய் மல்லையா மறைமுகமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக பல்வேறு வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம், பங்குச்சந்தைக்கு அவர் பணப் பரிவர்த்தனை செய்துள்ளார்.

தனது அடையாளத்தை மறைக்க பணப் பரிவர்த்தனைக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இது பங்குச்சந்தை ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு நிறுவனத்துடனும் அவர் தொடர்புவைத்துக் கொள்ளக்கூடாது’ என்று உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.