எஸ்.பி வேலுமணியின் மேல்முறையீட்டு மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய்…

டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி, நகராட்சி பணிகளுக்கான ஒப்பந்தங்களை சட்டவிரோதமாக வழங்கியதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு, அதுதொடர்பான மனுக்களையும் முடித்து வைத்தது.
இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறை, அறப்போர் இயக்கம் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வழக்கு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.