சவுதி அரேபியா பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்தியமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்!

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு 43 பயணிகள் பேருந்தில் உம்ரா புனித பயணம் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மெக்காவுக்கு சென்று உம்ரா சடங்குகளை முடித்து விட்டு, மதீனாவுக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. இது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க சவுதி அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. இதன்படி, விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். சம்பந்தப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முழு ஆதரவையும் தேவையான உதவியும் செய்வார்கள் என்று உறுதி அளித்துள்ளார்”.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.