சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன், இனிமேல் அதுபோல அவதூறாக பேச…

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன், இனிமேல் அதுபோல அவதூறாக பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கியதன் அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார். எனினும், மீண்டும் அவதூறான கருத்துக்களை அவர் யூடியூபில் பரப்பியதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, “மனுதாரர், நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்த இரண்டாவது நாளிலேயே மீண்டும் அவதூறாக பேசியுள்ளார். இதன்மூலம் நீதிமன்ற உத்தரவை மனுதாரர் மீறியது உறுதியாகிறது. ஆகவே, சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், யூடியூப் ஒப்பந்த விதிகளை மீறுகையில், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகம் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்பட்டால் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி புகழேந்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் நடவடிக்கை எடுக்கத்தவறினால், அவர்களும் குற்றவாளிகளே என்றும், ஆகவே, நடவடிக்கை எடுக்கத் தவறும் சமூக வலைதளங்கள் மீதும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.