4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைந்ததை அடுத்து சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலாவின் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தண்டனை காலம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, விடுதலை செய்யப்பட்ட பத்திரத்தை சிறைத்துறையினர் சசிகலாவிடம் ஒப்படைத்தனர். அப்போது, மருத்துவமனையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன், அவரது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். விடுதலை செய்யப்பட்டாலும், சிகிச்சையில் இருப்பதால் சசிகலா சென்னை திரும்புவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், சசிகலாவுடன் சிறைக்கு சென்ற இளவரசி அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாகிறார். சுதாகரனுக்கு தண்டனை காலம் நிறைவடைந்தாலும் அபராதத் தொகை செலுத்தப்படாததால், அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றுடன் 3 நாட்கள் சுவாச கருவி இல்லாமல் சுவாசிக்கும்பட்சத்தில், 10-வது நாள் மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், தங்களது மருத்துவமனையிலேயே சசிகலாவுக்கு சிகிச்சையை தொடரலாம் என அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே, சசிகலா விடுதலையானதை வரவேற்கும் வகையில், சேலம் அண்ணா பூங்கா அருகே பட்டாசு வெடித்து அ.ம.மு.க வினர் கொண்டாட்டினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதேபோல், ஸ்ரீவில்லிப்புத்தூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அமமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.







