என்.சங்கரய்யா மறைவு | இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும் என கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.  சுதந்திரப் போராட்ட தியாகியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான  சங்கரய்யா…

முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

சுதந்திரப் போராட்ட தியாகியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான  சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-ந் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார்.  சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும்,  இளைஞர்களும் சமூகவலைத்தளங்கள் மூலமாக மறைந்த என்.சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சங்கரய்யா இறுதி நிகழ்வுகள் நாளை நடைபெறும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுபெரும் சுதந்திர போராட்ட வீரரும்,  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா (102) உடல் நலக்குறைவின் காரணமாக இன்று (நவம்பர் 15) காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.

அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலும்,  மதியம் 2 மணி முதல் சென்னை தியாகராய நகர் வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திலும் வைக்கப்படவுள்ளது.

இறுதி நிகழ்ச்சிகள் நாளை (நவம்பர் 16) காலை 10.00 மணியளவில்,  மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்போடு நடைபெறும்.  கட்சியின் அனைத்து கிளைகளும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடவும்,  ஒரு வார காலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்து துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”  என அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.