உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா – கைக்குழந்தை உட்பட 7 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.  கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம்…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது.  கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது.  ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன.

பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.  இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியது.  இந்த தாக்குதல் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது நிகழ்ந்தது. இதில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியானதாகவும், 50- க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில்,  நேற்று மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.  இந்த தாக்குதல் உக்ரைனின் ஒடேசா நகரில் அடுக்குமாடி கட்டிடத்தின்மீது நடத்தப்பட்டுள்ளது. இதில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 3 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த பல்வேறு நாடுகளும், சமூக நல அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.