ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களிடம் எந்த தகவலும் இல்லை என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் போர் புரிந்து வரும் ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் அந்நாட்டு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்தன.
மேலும் விளாதிமீர் புதின் புற்று நோயால் அவதியுற்று வருவதாகவும், அவர் உடல் சோர்வாக உள்ள வீடியோ அண்மையில் ஊடகங்கள் வெளியிடப்பட்டதோடு, விவாதிக்கப்பட்டன. எனினும் இந்த தகவலை ரஷ்ய அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய புலனாய்வு அமைப்பு இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் உடல்நிலை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகளே என அவர் தெரிவித்துள்ளார். அவற்றை நிரூபிக்கும் வகையிலான உளவு தகவல் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தன்னை பொறுத்தவரை அவர் அளவுக்கு அதிகமாகவே ஆரோக்கியமாக உள்ளார் என மத்திய புலனாய்வு அமைப்பு இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








